ரோஹித் சர்மாவின் கருத்துடன் நானும் ஒத்துப் போகிறேன் - இம்பேக்ட் வீரர் விதி குறித்து விராட் கோலி!
இம்பேக்ட் பிளேயர் விதியின் காரணமாக ஆல் ரவுண்டர்கள் பொதுமான அளவு பந்துவீசுவதற்கான வாய்ப்புகள் குறைந்துவிட்டன என விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தொடங்கி நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு கொல்கத்தா நைட் ரைடர், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் முன்னேறியுள்ளன. மீதமுள்ள ஒரு இடத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான லீக் போட்டியானது இன்று பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது.
இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் பெரும் விவாதத்தை கிளப்பிய விஷயங்களில் ஒன்றாக இம்பேக்ட் பிளேயர் விதி மாறியுள்ளது. கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த விதியானது, நடப்பு ஐபிஎல் தொடரிலும் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் இந்த விதியைப் பயன்படுத்தி ஒவ்வொரு அணிகளும் இமாலய இலக்கை நிர்ணயித்து வருவதுடன், பந்துவீச்சாளர்களுக்கு பெரும் தலைவலியையும் உருவாக்கி வருகிறது. ஏனெனில் இந்தாண்டு ஐபிஎல் தொடரில் மட்டும் 8 முறைக்கு மேல் 250 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்டுள்ளது.
Trending
இதனால் பந்துவீச்சாளர் கடும் அழுத்ததிற்கு உள்ளாகியுள்ளனர். அதிலும் குறிப்பாக முகமது சிராஜ் போன்ற வேகப்பந்து வீச்சாளர் ஐபிஎல் தொடரிலிருந்து இந்த விதியை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர். மேற்கொண்டும் ரோஹித் சர்மா உள்பட சில வீரர்களும் இம்பேக்ட் பிளேயர் விதிக்கு எதிராக தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் தற்போது இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியும் இம்பேக்ட் பிளேயர் விதிக்கு எதிரான தனது கருத்தை முன்வைத்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “இம்பேக்ட் பிளேயர் விதி தொடர்பான விவாதத்தில் ரோஹித் சர்மாவின் கருத்துடன் நானும் ஒத்துப் போகிறேன். இந்த விதியின் காரணமாக ஆல் ரவுண்டர்கள் பொதுமான அளவு பந்துவீசுவதற்கான வாய்ப்புகள் குறைந்துவிட்டன. மேலும் பந்துவீச்சாளர்களும் அழுத்ததிற்கு உள்ளாகியுள்ளனர். ஏனெனில் அவர்கள் பந்துவீச்சில் ஒவ்வொரு பந்தும், பவுண்டரியும் சிக்ஸர்களும் சென்றால் நாங்கள் என்ன செய்ய முடியும் என்ற மனநிலையில் இருக்கிறார்கள்.
இதுபோன்ற ஒரு உணர்வை நான் ஒருபோதும் அனுபவித்ததில்லை. சர்வதேச அளவில் கிரிக்கெட் தொடரில் விளையாடிவரும் நாங்கள், இப்படி ஒரு சார்புடன் இருக்க கூடாது. பேட்டர்களுக்கும், பந்துவீச்சாளர்களுக்கும் இடையே ஒரு சமமான போட்டி தான் கிரிக்கெட்டின் அழகாக இருக்கிறது. ஏனெனில் அனைத்து அணிகளிலும் பும்ரா மற்றும் ரஷித் கான் போன்ற வீரர்கள் இல்லை. அணியில் ஒரு கூடுதலாக ஒரு பேட்டர் இருக்கிறார் என்ற காரணத்தினால் என்னால் பவர் பிளே ஓவர்களில் 200 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாட முடிகிறது.
ஏனென்றால் நம்பர் 8 வரை ஒரு தரமான பேட்ஸ்மேன் இருக்கிறார் என்று நன்றாக தெரியும். இதுதான் கிரிக்கெட்டின் சமநிலையை உடைப்பதாக கருதுகிறேன். நான் மட்டுமல்லை என்னை போல் பல வீரர்களும் இவ்வாறுதான் நினைக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார். முன்னதாக அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் இம்பேக் பிளேயர் விதிமுறை குறித்து பரிசீலிக்கப்படும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now