
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஃப்கானிஸ்தான் அணியின் பயணம் முடிவுக்கு வந்துள்ளது. தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி தோல்வியடைந்தது. இதன் மூலம் 9 லீக் போட்டிகளில் 4 வெற்றி, 5 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 6வது இடத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி நிறைவு செய்துள்ளது.
இந்த உலகக்கோப்பை தொடருக்கு முன் ஸ்காட்லாந்து அணியை மட்டுமே ஆஃப்கானிஸ்தான் அணி வீழ்த்தியிருந்த நிலையில், இந்த உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட முன்னாள் சாம்பியன் அணிகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளது. இதன் மூலமாக 8 அணிகள் மட்டும் விளையாடும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு ஆஃப்கானிஸ்தான் அணி தகுதிபெற்றுள்ளது.
இந்திய மைதானங்களுக்கு ஏற்ப வீரர்கள், பேட்டிங் பிரச்சனைகளை, வேகப்பந்துவீச்சாளர்களின் எழுச்சி, சூழலுக்கு ஏற்ப பேட்டிங் என்று ஆஃப்கானிஸ்தான் அணியின் திட்டங்கள் அனைத்தும் ரசிகர்கள் மிரள வைத்தது. அதேபோல் இந்திய ஆடுகளங்கள் கூடுதலாக புரிந்து கொள்ள அஜய் ஜடேஜாவை அணிக்குள் கொண்டு வந்தது, ஜானத்தன் டிராடின் வியூகங்கள் உள்ளிட்டவை பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இதனால் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு மிகச்சிறந்த உலகக்கோப்பை தொடராக அமைந்துள்ளது.