
இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனாக அறியப்பட்டவர் ஈயன் மோர்கன். தற்போது 36 வயதான மோர்கன், அயர்லாந்து நாட்டில் பிறந்தவர். 2006 வாக்கில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். அவர் முதன் முதலில் விளையாடிய சர்வதேச கிரிக்கெட் போட்டி அயர்லாந்து அணிக்காக தான்.
பின் 2009 ஏப்ரல் வரை அயர்லாந்து அணிக்காக விளையாடி வந்தார். அதே ஆண்டின் மே மாதம் முதல் இங்கிலாந்து அணிக்காக விளையாட தொடங்கினார். அது முதல் கடந்த ஆண்டு வரையில் இங்கிலாந்து அணிக்காக அவர் விளையாடி இருந்தார். இவரது தலைமையிலான இங்கிலாந்து அணி முதல் முறையாக ஒருநாள் உலகக்கோப்பை தொடரை வென்று சாதனைப்படைத்தது.
ஆனால் அதன்பின் அவரது ஃபார்ம் கேள்விக்குறியானதை அடுத்து, கடந்த ஆண்டு ஜூனில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இருப்பினும் எஸ்ஏ 20 லீக் கிரிக்கெட் தொடரில் பார்ல் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார். இந்நிலையில் தற்போது அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறூவதாக ஈயன் மோர்கன் அறிவித்துள்ளார்.