
மகளிருக்கான யு 19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் இன்று தொடங்குகிறது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) முதன்முறையாக இந்த தொடரை நடத்துவதால் இளம் வீராங்கனைகள் உலக அரங்கில் பிரகாசிக்க சிறந்த வாய்ப்பு உருவாகி உள்ளது.
ஆடவருக்கான யு 19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை ஐசிசி கடந்த 1988ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகிறது. இதுவரை 14 தொடர்கள் நடத்தப்பட்டுள்ளது. ஆனால் மகளிருக்கான யு 19 உலகக் கோப்பை தொடர் நடத்தப்படுவது இதுவே முன்முறையாகும். கடந்த 5 ஆண்டுகளில் மகளிர் கிரிக்கெட் பெரிய அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. எனினும் விளையாட்டை மேலும் பிரபலப்படுத்தும் வகையிலும், இளம் வீராங்கனைகளின் திறமைகளை கண்டறிவதற்காகவும் யு 19 உலகக் கோப்பை தொடரை ஐசிசி முன்னெடுத்துள்ளது.
இந்தத் தொடர் 2021ஆம் ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கரோனா தொற்று காரணமாக தற்போது நடைபெறுகிறது. டி 20 வடிவிலான இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கி வரும் 29ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 16 அணிகள் கலந்து கொள்ளும் இந்தத் தொடரில் மொத்தம் 41 ஆட்டங்கள் பெனோனி, போட்செஃப்ஸ்ட்ரூம் உள்ளிட்ட 4 இடங்களில் நடைபெறுகிறது.