
கடந்த 2007ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற முதல் டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்ததுடன், முதல் டி20 உலகக்கோப்பையையும் கைப்பற்றியது.
அதிலும் அப்போட்டியில் இந்திய அணி தரப்பில் ஜோகிந்தர் சர்மா வீசிய அந்த கடைசி ஓவர் ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் ரசிகர் நெஞ்சிலும் மறக்க முடியாத தருணமாக என்றென்றும் இருக்கும். கடைசி ஓவரில் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது ஓவரை வீசும் பொறுப்பை கேப்டன் தோனி, ஜோகிந்தர் சர்மா வசம் ஒப்படைத்தார்.
ஓவரின் முதல் பந்தை வைட் வீசிய அவர், இரண்டாவது பந்தில் மிஸ்பா-உல்-ஹக் சிக்ஸர் விளாசி இருந்தார். மூன்றாவது பந்தில் ஸ்கூப் ஆடி பைன்-லெக் திசையில் கேட்ச் ஸ்ரீசாந்த் வசம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகியிருப்பார் மிஸ்பா. அதன் மூலம் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் உலகக் கோப்பையை வென்று அசத்தி இருக்கும்.