T20 WC 2024: புதிய வரலாறு படைத்த ஃபசல்ஹக் ஃபரூக்கி!
டி20 உலகக்கோப்பை தொடர் வரலாற்றில் ஒரு பதிப்பில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் சாதனையை ஆஃப்கானிஸ்தானின் ஃபசல்ஹக் ஃபரூக்கி படைத்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் அரையிறுதிப்போட்டிக்கு இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் முன்னேறிய நிலையில், இன்று தென் ஆப்பிரிக்கா - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதலாவது அரையிறுதிப்போட்டி நடைபெற்றது.
டிரினிடாட்டில் உள்ள பிரையன் லாரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி பேட்டர்கள் தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் ஆஃப்கானிஸ்தான் அணி 11.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் 56 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
Trending
அந்த அணியில் அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 10 ரன்களைச் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற எந்த வீரர்களும் இரட்டை இலக்க ரன்களைச் சேர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தென்ன் ஆப்பிரிக்க அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய தப்ரைஸ் ஷம்ஸி மற்றும் மார்கோ ஜான்சென் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து எளிய இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க அணியில் டி காக் 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ஆனால் அதன்பின் இணைந்த ரிஸா ஹென்றிக்ஸ் 29 ரன்களையும், கேப்டன் ஐடன் மார்க்ரம் 23 ரன்களையும் சேர்த்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச்சென்றனர். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 8.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி, முதல் முறையாக டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறி வரலாறு படைத்துள்ளது.
இந்நிலையில், ஆஃப்கானிஸ்தான் அணி அரையிறுதிப்போட்டியில் தோல்வியைத் தழுவினாலும் அந்த அணி வேகப்பந்து வீச்சாளர் ஃபசல்ஹக் ஃபரூக்கி டி20 உலகக்கோப்பை தொடரில் வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளார். அதன்படி இன்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க வீரர் குயின்டன் டி காக்கின் விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம் நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஃபசல்ஹக் ஃபரூக்கி 17 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
Fazalhaq Farooqi has had a dream World Cup! #T20WorldCup #AFGvSA #SAvAFG #Cricket pic.twitter.com/VRC77f21TH
— CRICKETNMORE (@cricketnmore) June 27, 2024
இதன்மூலம் டி20 உலகக்கோப்பை தொடர் வரலாற்றில் ஒரு பதிப்பில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி வீரர் எனும் சாதனையை ஃபசல்ஹக் ஃபரூக்கி படைத்துள்ளார். முன்னதாக கடந்த 2021ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை வீரர் வநிந்து ஹசரங்கா 16 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்த நிலையில், அதனைத் தற்போது ஃபசல்ஹக் ஃபரூக்கி முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒரு டி20 உலகக்கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள்
- 17* - ஃபசல்ஹக் ஃபரூக்கி (ஆஃப்கானிஸ்தான், 2024)
- 16 - வனிந்து ஹசரங்க (இலங்கை, 2021)
- 15 - அஜந்தா மெண்டிஸ் (இலங்கை, 2012)
- 15 - வனிந்து ஹசரங்க (இலங்கை, 2022)
- 15 - அர்ஷ்தீப் சிங் (இந்தியா, 2024)*
Win Big, Make Your Cricket Tales Now