AUS vs WI, 1st T20I: விண்டீஸை வீழ்த்தி ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. ஆஸ்திரேலியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதி முதலாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர் ஜான்சன் சார்லஸ் 3 ரன்களிலும், பிராண்டன் கிங் 12 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த கைல் மேயர்ஸ் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 39 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் 19 ரன்களோடு ரெய்ஃபெரும், நிக்கோலஸ் பூரன், ரோவ்மன் பாவெல் ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களோடு பெவிலியனுக்கு திரும்பினர்.
Trending
இறுதியில் ஜேசன் ஹோல்டர், ஓடியன் ஸ்மித், அல்ஸாரி ஜோஸப் ஆகியோர் தங்கள் பங்கிற்கு சில சிக்சர்களை பறக்கவிட்டு ஸ்கோரை உயர்த்தினர்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்களைச் சேர்த்தது. ஆஸ்திரேலிய தரப்பில் ஹசில்வுட் 3 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதனையடுத்து 146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. அதிரடியாக ஆட்டத்தை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். டேவிட் வார்னர் 14, கீரின் 14, மிட்செல் மார்ஸ் 3, மெக்ஸ்வெல் 0, டிம் டேவிட் 0 என ஆட்டமிழந்தனர்.
ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 58 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது. கேப்டன் ஆரோன் பிஞ்சுடன் ஜோடி சேர்ந்த மேத்யூ வேட் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிஞ்ச் 58 ரன்னில் பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த பேட் கம்மின்ஸ் 4 ரன்னில் போல்ட் ஆனார்.
இறுதியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை காட்ரேல் வீசினார். முதல் பந்தில் வேட் பவுண்டரி விளாச இன்னும் 5 பந்தில் 7 ரன்கள் எடுக்க வேண்டி இருந்தது. அடுத்த பந்தில் கேட்ச் மிஸ் செய்யப்பட்டது. இதன் மூலம் 2 ரன்கள் எடுக்கப்பட்டது.
3ஆவது பந்தில் வேட் 1 ரன் எடுத்தார். 4ஆபந்தில் மீண்டும் கேட்ச் மிஸ் செய்யப்பட்டது. அதில் ஸ்டார்க் 2 ரன்கள் எடுத்தார். 5ஆவது பந்தில் 2 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலியா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 2ஆவது டி20 போட்டி வருகிற 7ஆம் தேதி நடைபெறுகிறது.
Win Big, Make Your Cricket Tales Now