
அயர்லாந்து அணி சமீபத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இத்தொடரின் முதல் போட்டியில் அபார வெற்றியைப் பதிவுசெய்த அயர்லாந்து அணி, அடுத்தடுத்து போட்டிகளில் வெற்றிக்கு அருகில் சென்று தோல்வியைச் சந்தித்தது. இதனால் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை அயர்லாந்து அணி 1-2 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணியிடம் தோல்வியைத் தழுவியது.
இதையடுத்து அயர்லாந்து அணி ஸ்காட்லாந்து மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு எதிரான முத்தரப்பு டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இந்த முத்தரப்பு தொடரானது மே 18ஆம் தேதி தொடங்கி மே 28ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக அயர்லாந்து அணி நெதர்லாந்திற்கு செல்லவுள்ளது. இந்நிலையில் அயர்லாந்து அணி வீரர் கிரஹாம் ஹூம் விசா பிரச்சனை காரணமாக இத்தொடரில் பங்கேற்க முடியாத நிலையில் உள்ளார்.
அவருக்கு நெதர்லாந்து விசா கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக அவர் இந்த முத்தரப்பு டி20 தொடரிலிருந்து விலகியுள்ளார். மேலும் அவருக்கு மாற்றாக ஆல் ரவுண்டர் ஃபின் ஹேண்ட் அயர்லாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். வேகப்பந்துவீச்சு ஆல் ரவுண்டரான ஃபின் ஹேண்ட் அயர்லாந்து அணிக்காக ஒரு டெஸ்ட் மற்றும் 10 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.