
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் கடந்த மாதம் 31ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஐந்தாவது லீக் போட்டியில் ஆர்சிபி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. இப்போட்டி பெங்களூருவிலுள்ள சின்னசாமி மைதானத்தில் நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்து 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் அடித்தது மும்பை இந்தியன்ஸ் அணி. இந்த இலக்கை துரத்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு துவக்க வீரர்களாக கேப்டன் டு ப்ளசிஸ் மற்றும் முன்னாள் கேப்டன் விராட் கோலி களமிறங்கினர்.
எந்தவித சிக்கலும் இன்றி முதல் ஓவரில் இருந்து பவுண்டர்களாக அடிக்கத் தொடங்கியது விராட்-டு ப்ளசிஸ் ஜோடி. ஒவ்வொரு ஓவரிலும் பவுண்டரி மற்றும் சிக்ஸர்கள் வந்து கொண்டே இருந்தது. முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 100+ ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. அப்போது டு ப்ளசிஸ் மற்றும் விராட் கோலி இருவரும் அரைசதம் அடித்தனர். ஐபிஎல் கிரிக்கெட்டில் விராட் கோலி தனது 50ஆவது அரைசதத்தை பூர்த்தி செய்தார்.
ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணிக்காக அதிக அரைசதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். ஒட்டுமொத்தமாக ஐபிஎல்-இல் திக சதங்கள் அடித்த இரண்டாவது வீரர் ஆவார். 60 அரைசதங்களுடன் டேவிட் வார்னர் முதலிடத்தில் உள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டில் 50 அரைசதங்களை அடித்த ஒரே இந்திய வீரர் என்ற சாதனையும் படைத்தார். இவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் ஷிகர் தவான், ஐபிஎல்-இல் இதுவரை 49 அரைசதங்களை அடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.