
இந்திய அணி தற்சமயம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டி20 போட்டிகளின் முடிவில் இந்திய அணி வெற்றிபெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றி அசத்தியது. அதிலும் நேற்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு அணியின் வெற்றிக்கு உதவினார்.
முன்னதாக அணியின் அடுத்த கேப்டனாக பார்க்கப்பட்ட ஹர்திக் பாண்டியாவை ஒதுக்கி சூர்யகுமார் யாதவிற்கு டி20 அணியின் கேப்டன் பதவி வழங்கப்பட்டது. அத்துடன் சமீபகாலங்களில் சோபிக்க தவறி வரும் ஷுப்மன் கில்லிற்கு அணியின் துணைக்கேப்டன் பதவியும் வழங்கப்பட்டது பெரும் விவாதங்களுக்கு வழிவகுத்தது. மேலும் ஹர்திக் பாண்டியாவின் ஃபிட்னஸ் காரணமாக அவருக்கு கேப்டன் பதவி வழங்கவில்லை என தேர்வுகுழு தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்திருந்தார்.
இதன் காரணமாக அவருக்கு இந்திய அணியில் தொடர்ச்சியாக வாய்ப்புகள் வழங்கப்படுமா என்ற சந்தேகமும் எழத்தொடங்கியுள்ளது. மேற்கொண்டு அவர் பந்துவீச்சை நிரூபித்தால் மட்டுமே ஒருநாள் அணியில் வாய்ப்பு கிடைக்க்கும் என்ற பேச்சுகளும் எழுந்து வருகின்றனர். அதனால் அவர் தனது உடற்தகுதி மற்றும் பந்துவீச்சில் மேம்பட்டால் மட்டுமே அணியில் வாய்ப்பை பெறுவார் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளது.