
ஷுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்களை உள்ளடக்கிய இந்திய அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் இந்திய அணியானது 4-1 என்ற கணக்கில் டி20 தொடரைக் கைப்பற்றி அசத்தியுள்ளது. இதனையடுத்து இந்திய அணியானது இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது.
இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய அணி இன்றைய தினம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கொண்டு இலங்கை அணிக்கு எதிரான தொடரில் எந்தெந்த வீரர்கள் இடம்பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. ஏனெனில் இந்திய அணியில் தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும், சிறப்பாக செயல்பட்டுவரும் ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன் உள்ளிட்ட வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
ஏனெனில் சமீபத்தில் முடிந்த ஜிம்பாப்வே தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் தொடர்ச்சியாக அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களைக் குவித்தார். அதேசமயம் சஞ்சு சாம்சனும் கடைசி டி20 போட்டியில் அரைசதம் கடந்து அசத்தினார். இதனால் அவர்கள் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. ஆனால் மறுபக்கம் தொடர்ச்சியான செயல்பாடுகள் இல்லாவிட்டாலும் ஒருசில வீரர்களுக்கு அணியில் வய்ப்புகள் கிடைத்து வருதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.