
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் திராவிட்டின் பதவிக் காலம், அண்மையில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை 2024 தொடருடன் நிறைவடைந்தது. இதனையடுத்து இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் தேர்வு செய்யப்பட்டார். மேலும் எதிர்வரவுள்ள இலங்கை அணிக்கு எதிரான தொடர் முதல் அவரது பயிற்சி காலமும் தொடங்குகிறது.
அதேசமயம் இந்திய அணியின் மற்ற பயிற்சியாளர்கள் குறித்து இன்னும் எந்த அறிவிப்பும் வெளியாகாததால் அணியில் குழப்பம் நிடித்தது. ஏனெனில் இந்திய அணியின் புதிய பேட்டிங், பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங் பயிற்சியாளர்கள் யார் என்பதை தேர்வு செய்வதில் புதிய பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் பிசிசிஐ இடையே முரன்பாடுகள் உள்ளதாக தகவல் வெளியானது. ஏனெனில் கௌதம் கம்பீர் தன்னுடன் ஐபிஎல் தொடரில் பணியாற்றிய வீரர்களை பயிற்சியாளர்களாக நியமிக்கும் படி வலிவுறுத்தினார்.
அதன்படி பேட்டிங் பயிற்சியாளராக அபிஷேக் நாயர், பந்துவீச்சு பயிற்சியாளராக மோர்னே மோர்கல் மற்றும் ஃபீல்டிங் பயிற்சியாளராக ரியான் டென் டெஸ்காட்டே ஆகியோரை நியமிக்க வேண்டும் என கம்பீர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் பிசிசிஐ-க்கு இதில் உடன்பாடில்லாத காரணத்தினால் தான் இதுவரை மற்ற பயிற்சியாளர்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகவில்லை என தகவல்கள் வெளியாகின.