
கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறி ஏமாற்றமளித்தது. ஏனெனில் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணியானது, நாக் அவுட் சுற்றுக்கு தகுதிபெறமால் ஏமாற்றத்தைக் கொடுத்தது.
இதையடுத்து அணியின் தலைமை பயிற்சியாளர் கிராண்ட் பிராட்பர்ன், இயக்குநர் மிக்கி ஆர்தர், பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்க்கல், பேட்டிங் பயிற்சியாளர் ஆண்ட்ரூ புட்டிக் ஆகியோர் நீக்கப்பட்டனர். மேலும் பாபர் ஆசாமும் தனது கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார். அதன்பின் பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக ஷாஹீன் ஷா அஃப்ரிடியும், டெஸ்ட் அணிக்கான கேப்டனாக ஷான் மசூத்தும் நியமிக்கப்பட்டனர்.
ஆனால் அதன்பின்னரும் பாகிஸ்தான் அணி மேற்கொண்ட ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து சுற்றுப்பயணங்களில் படுதோல்வியைத் தழுவியதை அடுத்து, அணியின் ஆலோசகர் பொறுப்பிலிருந்த முகமது ஹபீஸும், டி20 அணியின் கேப்டன் பதவில் இருந்து ஷாஹீன் அஃப்ரிடியும் நீக்கப்பட்டனர். இதனையடுத்து நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.