
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது வ்ரும் ஜூன் மாதம் முதல் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் பங்கேற்று விளையாடவுள்ள அனைத்து அணிகளையும் அந்நாட்டுக் கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்துள்ளன. அதன்படி ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) கடந்த மாதம் அறிவித்தது.
அதன்படி இந்த அணியில் நீண்ட நாள்களாக தனது வாய்ப்பிற்காக காத்திருந்த நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை மிகச்சிறப்பாக வழிநடத்தி அணியின் பிளே ஆஃப் சுற்றுக்கு அழைத்துச் சென்றதுடன், இந்த சீசனில் அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய 5 அரைசதங்களுடன் 500 ரன்களுக்கு மேல் விளாசியும் அசத்தியுள்ளார்.
இதன்மூலம் அவர் இந்திய அணிக்காகவும் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்துவார் என ரசிகர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில், சர்வதேச அரங்கில் சஞ்சு சாம்சன் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்த இதுவே சரியான தருணம் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் கெளதம் கம்பீர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.