
இங்கிலாந்து அணி சமீபத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் இந்திய அணி மூன்று போட்டிகளிலும் அடுத்தடுத்து வெற்றியைப் பதிவுசெய்து 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்தும் அசத்தியது. இத்தொடரில் இந்திய அணியின் துணைக்கேப்டன் ஷுப்மன் கில் முதலிரண்டு போட்டிகளில் அரைசதமும், கடைசி போட்டியில் சதமும் அடித்து தொடர் நாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒருநாள் வீரர்களுக்கான புதுபிக்கப்பட்ட தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் பாகிஸ்தானின் பாபர் ஆசாமை பின்னுக்கு தள்ளி இந்திய வீரர் ஷுப்மன் கில் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். முன்னதாக பாபர் ஆசாம் முத்தரப்பு ஒருநாள் தொடரில் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க முடியாமல் தடுமாறியதுடன், ஒரு போட்டியில் கூட அரைசதம் அடிக்கவில்லை.
அதேசமயம் ஷுப்மன் கில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் அரைசதம் கடந்து அசத்தியதன் மூலம் தற்போது முதலிடத்தைப் பிடித்துள்ளார். மேற்கொண்டு இந்த பட்டியலில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா மூன்றாம் இடத்திலும், விராட் கோலி 6ஆம் இடத்திலும் உள்ள நிலையில், இங்கிலாந்து தொடரில் அபாரமாக விளையாடி வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 9ஆம் இடத்திற்கும் முன்னேறி அசத்தியுள்ளனர்.