
நடந்து முடிந்த ஐபிஎல் சீசன் இந்திய அணிக்கு இன்னும் வீரர்களை அடையாளம் காட்டியுள்ளது. உதாரணமாக ருத்துராஜ் கெய்க்வாட் கடந்த சீசனில் மிகச்சிறப்பாக செயல்பட்டார். இந்திய அணியிலும் இடம் பிடித்தார். ஆனால் விளையாடுவதற்கு பெரிதளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் இந்த சீசன் நன்றாக செயல்பட்டு இருப்பதால் வருகிற வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில் வாய்ப்புகள் கொடுக்க உள்ளதாக தகவல்கள் வந்திருக்கிறது.
அதேபோல் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் விளையாடிய விதம் பிசிசிஐ தலைமையில் பலரை கவர்ந்திருக்கிறது. ஆகையால் அவருக்கு டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இடம் கொடுக்க உள்ளதாகவும் பேச்சுக்கள் அடிபடுகின்றன. கொல்கத்தா அணிக்கு பினிஷிங்கில் அசாத்தியமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார் ரிங்கு சிங். ஓரிரு போட்டிகள் மட்டுமல்லாது தொடர் முழுவதும் அந்த ரோலில் சிறப்பாக செயல்பட்டதால் வருகிற வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து தொடர்ந்து வாய்ப்புகள் கொடுத்து பரிசோதிக்க உள்ளதாகவும் தெரிகிறது.
டி20 அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியாவும் இதற்கு ஆதரவும் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் திலக் வர்மா மற்றும் சில இளம் பந்துவீச்சாளர்களுக்கும் விரைவில் டி20 அணிகளில் இடம் கொடுக்க இருப்பதாகவும் தொடர்ந்து பேசப்பட்டு வரும் நிலையில், லக்னோ அணியின் ஆலோசகராக இருந்து வரும் கவுதம் கம்பீர் தனது சமீபத்திய பேட்டியில் இளம்வீரர் ஜெய்ஸ்வால் குறித்து கருத்துக்கள் தெரிவித்தார். அப்போது ஜெய்ஷ்வால் 3 ஃபார்மட்டிலும் விளையாட வேண்டும் என்று தெரிவித்தார்.