
ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் கிளென் மேக்வெஸ்ல் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது 5ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சதமடித்த வீரர் என்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவின் சாதனையை கிளென் மேக்ஸ்வெல் சமன்செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெஸ்ட் இண்டீஸ் ஆணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி கிளென் மேக்ஸ்வெல்லின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 241 ரன்களை குவித்தது. இதில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த கிளென் மேக்ஸ்வெல் சதமடித்து அசத்தியதுடன் 55 பந்துகளில் 12 பவுண்டரி, 8 சிக்சகள் என 120 ரன்களை விளாசி தள்ளினார்.