
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிக் கொள்ளும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜனவரி 25ஆம் தேதி முதல் தொடங்குகிறது. மொத்தம் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடர் மார்ச் மாதம் வரை நடைபெறவுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி இன்னொரு முறை தகுதி பெறுவதற்கு இந்த தொடரில் வெற்றி மிக முக்கியமானது.
அதே சமயத்தில் இறுதிப் போட்டிக்கான வாய்ப்புகள் இருப்பதற்கு இந்தத் தொடரை வெல்வது இங்கிலாந்து அணிக்கு மிகவும் முக்கியமானது. ஏனென்றால் அவர்கள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் மிகவும் பின்தங்கி இருக்கிறார்கள். கடந்த முறை இங்கிலாந்து இங்கு வந்த பொழுது முதல் டெஸ்டில் அபாரமான முறையில் சென்னையில் வைத்து வெற்றி பெற்றது. அந்த போட்டியில் ஜோ ரூட் இரட்டை சதம் அடித்து மிரட்டினார்.
ஆனால் அதற்கு அடுத்த மூன்று போட்டிகளிலும் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் என்ன செய்வது என்று தெரியாமல் விக்கெட்டை தியாகம் செய்து ஆட்டம் இழந்தார்கள். இந்திய அணி அபாரமாக தொடரை கைப்பற்றியது. குறிப்பிட்ட அந்தத் தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு இருக்க, இன்னொரு பக்கத்தில் அக்ஸர் படேலை எப்படி எதிர்கொள்வது என்றே தெரியாமல் இங்கிலாந்து பேட்டிங் யூனிட் சீர்குலைந்து போனது.