இதுதான் எங்களுக்கு திருப்பு முனையாக அமைந்தது - தோல்வி குறித்து ஷுப்மன் கில்!
மிடில் ஓவர்களில் எங்களால் விக்கெட்டுகளை எடுக்க முடியவில்லை, அதுவே எங்களுக்கு திருப்புமுனையாக அமைந்தது என குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
17ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று அஹ்மதாபாத்தில் நடந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 200 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக சாய் சுதர்ஷன் 84 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதையடுத்து 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் கேப்டன் ஃபாஃப் டூ பிளசிஸ் 24 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்த வில் ஜாக்ஸ் அதிரடியில் மிரட்டினார். இறுதியில், பெங்களூரு அணி 16 ஓவரில் இலக்கை எட்டியதுடன், 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் வில் ஜாக்ஸ் 41 பந்தில் 10 சிக்சர், 5 பவுண்டரியுடன் சதமடித்து அசத்தினார். விராட் கோலி 70 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
Trending
இந்நிலையில் இப்போட்டியின் தோல்வி குறித்து பேசிய குஜராத் அணி கேப்டன் ஷுப்மன் கில், “இந்த போட்டியில் விராட் கோலி மற்றும் வில் ஜேக்ஸ் இருவரும் விளையாடிய விதம் சிறப்பாக இருந்தது. அடுத்த போட்டியில் நாங்கள் சிறந்த திட்டத்துடன் வருவதுடன், அதனை களத்தில் செயல்படுத்தவும் வேண்டும் என நினைக்கிறேன். ஏனெனில் நீங்கள் பேட்டிங்கு செய்யும் போது எப்போதும் 10 முதல் 20 ரன்கள் கூடுதலாக எடுக்க வேண்டும் என நினைக்கலாம்.
ஆனால் இந்த போட்டியில் நாங்கள் 200 ரன்களை எட்டியதும், அது எங்களுக்குப் போதுமானது என்று நாங்கள் நினைத்தோம், துரதிர்ஷ்டவசமாக அது நாங்கள் விரும்பியபடி அமையவில்லை. மிடில் ஓவர்களில் எங்களால் விக்கெட்டுகளை எடுக்க முடியவில்லை, அதுவே எங்களுக்கு திருப்புமுனையாக அமைந்தது. நிச்சயம் இதிலிருந்து மீண்டு வருவோம்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now