இந்திய அணியின் விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் முன்னிலை வகிப்பார் - ஹர்பஜன் சிங் கணிப்பு!
நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரிஷப் பந்தை காட்டிலும் சஞ்சு சாம்சனிற்கு இந்திய அணி பிளேயிங் லெவனில் அதிக வாய்ப்புள்ளதாக முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கணித்துள்ளார்.
இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனானது இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டது. இத்தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு கொல்கத்தா நைட் ரைட்ர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் முன்னேறியுள்ளன. இத்தொடரின் பிளே ஆஃப் சுற்று போட்டிகள் அடுத்த வாரம் நடைபெறவுள்ள நிலையில், ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடருக்கான எதிர்பார்ப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன.
Trending
அதன்படி நடப்பு ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் ஜூன் மாதம் முதல் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ளது. இத்தொடருக்கான இந்திய அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்திய அணி தனது முதல் போட்டியை ஜூன் 5ஆம் தேதி அயர்லாந்து அணிக்கு எதிராக விளையாடவுள்ளது. மேலும் இத்தொடருக்கு முன்னதாக வங்கதேச அணியுடனான பயிற்சி போட்டியிலும் இந்திய அணி விளையாடவுள்ளது.
இந்நிலையில் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் மற்றும் ரிஷப் பந்த் இருவரும் விக்கெட் கீப்பர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற விவாதங்கள் எழத்தொடங்கியுள்ளது. ஏனெனில் காயத்திலிருந்து மீண்டுள்ள ரிஷப் பந்த் ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், விக்கெட் கீப்பிங்கிலும் அபாரமாக செயல்பட்டுள்ளார்.
அதேசமயம் சஞ்சு சாம்சனும் நடப்பு ஐபிஎல் தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி 500 ரன்களுக்கு மேல் குவித்ததுடன், அணியையும் சிறப்பாக வழிநடத்தி பிளே ஆஃப் சுற்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார். இவர்கள் இருவரும் இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தங்கள் வாய்ப்புகளை பெற்றுள்ளனர். இதனால் யார் அணியின் பிளேயிங் லெவனில் விளையாடுவார் என்ற கேள்வி அதிகரித்துள்ளது.
இந்நிலையில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரிஷப் பந்தை காட்டிலும் சஞ்சு சாம்சனிற்கு அதிக வாய்ப்புள்ளதாக முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கணித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “ஐபிஎல் தொடரில் ரிஷப் பந்த் சிறப்பாக விளையாடினார். அவர் தனது காயங்களில் இருந்து முழுமையாக மீண்டுள்ளதுடன், நல்ல உடற்தகுதியுடனும், பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங்குலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ஆனால் அதேசமயம் சஞ்சு சாம்சன் நடப்பு ஐபிஎல் தொடரில் அபாரமாக செயல்பட்டுள்ளார். அவருக்கு இந்த உலகக்கோப்பை தொடரில் வாய்ப்பு கிடைப்பதை பார்க்க விரும்புகிறேன். ஏனெனில் நடப்பு சீசனில் அவர் தொடர்ச்சியாக ரன்களை குவித்து அசத்தியுள்ளார். மேலும் 30 அல்லது 40 ரன்களை அடிக்கும் பழைய சஞ்சு சாம்சனாக இல்லாமல் இம்முறை 60, 70 ரன்களை விளாசும் புதிய வீரராக விளையாடியுள்ளார்.
இதனால் காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள ரிஷப் பந்தை விளையாட வைக்க எந்த அவசியமும் இல்லை என்று நினைக்கிறேன். ஏனெனில் அவர் தனது கம்பேக்கிற்காக கடினமாக உழைத்துள்ளார். அதனால் அவருக்கு போதிய அவகாசம் கொடுத்தால் நிச்சயம் அவர் இந்திய அணிக்காக ஏதாவது சிறப்பாக செய்வார் என்று நம்புகிறேன். அதனால் இந்த தொடரில் அவருக்கு அழுத்ததை கொடுக்காமல் சாம்சனுக்கு வாய்ப்பை வழங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now