
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்று போட்டி நேற்று ஆண்டிகுவாவில் நடைபெற்றது. இதில், டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது ஹர்திக் பாண்டியாவின் அரைசதத்தின் மூலமும், மற்ற பேட்டர்களின் ஒத்துழைப்பின் மூலமாகவும் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்களைக் குவித்தது. இதில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 50 ரன்களைச் சேர்த்தார்.
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணியானது இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததன் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்களை மட்டுமே சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 40 ரன்களைச் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன்மூலம் இந்திய அணியானது 50 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பையும் ஏறத்தாழ உறுதிசெய்துள்ளது. இப்போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், ஹர்திக் பாண்டியாவால் என்ன செய்ய முடியும் என்பது தனக்கு தெரியும் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.