
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற முடிந்த டி20 கிரிக்கெட் தொடரை 3 – 0 என்ற கணக்கில் இந்தியா ஒயிட் வாஷ் செய்து வென்றது. இதனால் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக தொடர்களை ஒய்ட் வாஷ் செய்து வென்ற அணி என்ற பாகிஸ்தானின் சாதனையை தகர்த்த இந்தியா புதிய உலக சாதனை படைத்து கோப்பையை வென்றது.
முன்னதாக 2024 டி20 உலகக் கோப்பைக்கு தேவையான வீரர்களை கண்டறிவதற்காக நடைபெற்ற இந்த தொடரில் இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு தங்களுடைய திறமையை காண்பித்தனர். அதில் முதலிரண்டு போட்டிகளில் மொத்தம் 124 ரன்கள் மற்றும் 2 விக்கெட்களை எடுத்த ஷிவம் துபே ஆல் ரவுண்டராக இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றி தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.
கடந்த 2019ஆம் ஆண்டு அறிமுகமாகி சுமாராக செயல்பட்டதால் கழற்றி விடப்பட்ட அவர் கடந்த வருடம் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சிறப்பாக செயல்பட்டு கம்பேக் கொடுத்தார். அந்த வாய்ப்பில் 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வெல்ல உதவிய அவர் தற்போது சீனியர் அணியிலும் தொடர் நாயகன் விருது வென்று அசத்தியுள்ளார்.