
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியதுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
குவாலியரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதைல் பேட்டிங் செய்த வங்கதேச அணி மெஹ்தி ஹசன் மிராஜ் (35), நஜ்மல் ஹுசைன் ஷாண்டோ (27) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தின் மூலம் 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.பந்துவீச்சில் இந்திய அணி சார்பாக அர்ஷ்தீப் சிங் மற்றும் வருண் சக்ரவர்த்தி ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.
இதனையடுத்து எளிய இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா 16 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த கேப்டன் சூர்யகுமர் யாதவும் 29 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.அவர்களைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான சஞ்சு சாம்சனும் 29 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய ஹர்த்திக் பாண்டியா அபாரமாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.