
இந்திய மண்ணில் விறுவிறுப்பாக அரங்கேறி வரும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த தொடரில் புதன்கிழமை நியூசிலாந்து அணிக்கு எதிராக மும்பையில் நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இதேபோல், நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற 2ஆவது அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. வருகிற ஞாயிற்றுக்கிழமை ( நவம்பர் 19 ஆம் தேதி) குஜராத் மாநிலம் அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் அரங்கேறும் இறுதிப் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
இந்நிலையில், இந்திய அணியின் ஆல்-ரவுண்டரும், துணை கேப்டனுமான ஹர்திக் பாண்டியா, கணுக்கால் காயத்தில் இருந்து மீளாததால், உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இருந்து விலகுவதாக கடந்த 4ஆம் தேதி உறுதி செய்தது. வங்கதேச அணிக்கு எதிரான போட்டியின் போது பந்தை காலை வைத்து தடுக்க முயன்ற ஹர்திக் பாண்டியாவுக்கு இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டது.