
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் சமீபத்தில் நிறைவடைந்தது. இதில் வெற்றி பெற்றதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி சுற்றுக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது. இந்த இறுதிப்போட்டி வரும் ஜூன் மாதம் 7ஆம் தேதியன்று இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் தான் மீண்டும் இந்த முறை மோதவுள்ளது.
இந்திய அணி என்னதான் ஆஸ்திரேலியாவை சொந்த மண்ணில் வீழ்த்தியிருந்த போதும், இறுதிப்போட்டி நடைபெறுவது இங்கிலாந்து மண்ணில் ஆகும். அதுவும் மே 28ஆம் தேதி வரை இந்திய வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடிவிட்டு, ஒரே ஒரு வாரத்திற்குள் டெஸ்ட் ஃபார்மெட்டிற்கு மாறியாக வேண்டும். இது தான் பெரிய சவாலாக இருக்கப்போகிறது. இதே போல இங்கிலாந்து களத்தில் ஹர்திக் பாண்டியா போன்ற வீரர் தேவையாக உள்ளது.
இங்கிலாந்தில் வேகப்பந்துவீச்சு தான் எடுபடும். எனவே பேட்டிங்கில் நல்ல ஆழம் தர வேண்டும், அதே போல அதிரடி காட்டினால் இன்னும் சிறப்பாக ரன் குவிக்கலாம். இங்கிலாந்து அணி அவர்களது மண்ணில் பேஸ்பால் என்ற அதிரடி முறையை பயன்படுத்தி தான் வெற்றி கண்டு வருகின்றனர். எனவே ஹர்திக் பாண்டியா நிச்சயம் அதற்கு சரியாக இருப்பார்.