
குஜராத் டைட்டன்ஸ் அணியில் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா மீண்டும் தன்னுடைய பழைய அணியான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பி இருப்பது பல கேள்விகளையும், விமர்சனங்களையும் எழவைத்துள்ளது. மற்றொரு அணியில் கேப்டனாக இருக்கும் ஒரு வீரரை ரூ.15 கோடி கொடுத்து அழைத்து வருவது நிச்சயமாக அடுத்த கேப்டனுக்கான முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.
ரோஹித் சர்மா தன்னுடைய கடைசிகட்ட கிரிக்கெட் பயணத்தில் இருப்பதால், அடுத்த கேப்டனுக்கான முயற்சியாக ஹர்திக் பாண்டியாவை அழைத்துவந்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. ஆனால் அவர்களின் இந்த முடிவு தான் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளராக இருக்கும் ஜஸ்பிரித் பும்ராவை காயப்படுத்தியுள்ளது.
ஒருவேளை அணியில் இருக்கும் வீரர்களுடன் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் கலந்து பேசவில்லையா என்பது தெரியவில்லை. ஒருவேளை பேசாமல் ஹர்திக் பாண்டியாவை அழைத்துவரும் முடிவை எடுத்திருந்தால் நிச்சயம் அது எந்த வீரருக்கும் சங்கடமான மனநிலையையே ஏற்படுத்தும். அணிக்காக எல்லாம் செய்த தன்னை நம்பாமல் வேறொரு நபரின் மீது நம்பிக்கை வைத்து அதீதமாக கொண்டாடும் போது அனைத்தையும் செய்த வீரருக்கு ஏற்படும் மனநிலை தான் ஜஸ்பிரித் பும்ராவிற்கும் ஏற்பட்டுள்ளது.