
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரின் 9ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் பாகிஸ்தானின் அதிவேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராவுஃப் லாகூர் கலந்தர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் கராச்சி கிங்ஸ் அணிக்கெதிரான லீக்க் போட்டியின் போது லாகூர் கலந்தர்ஸ் அணி தரப்பில் பந்துவீசிய ஹாரிஸ் ராவுஃப் தோள்பட்டையில் காயமடைந்தார்.
இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். அதில் அவரது காயம் தீவிரமடைந்துள்ளதும், இதன் காரணமாக அவர் குணமடைய 4 முதல் 6 வாரங்கள் ஆகலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து லாகூர் கலந்தர்ஸ் அணி தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “மருத்துவக் குழு, ஆலோசனைக்குப் பிறகு, அவர் குணமடைய நான்கு முதல் ஆறு வாரங்கள் தேவை என்று முடிவு செய்தது, இதனால் அவர் நடப்பு பிஎஸ்எல் தொடரை தவறவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதுள்ளது’ என்று தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக அவர் நடப்பாண்டு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலும் விளையாடுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி வரும் ஜூன் ஒன்றாம் தேதி முதல் ஐசிசியின் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ளது. இதில் இந்திய - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை லீக் போட்டி ஜூன் 10ஆம் தேதி நியூயார்க்கில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஹாரிஸ் ராவுஃப் காயமடைந்துள்ளது பாகிஸ்தான் அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.