
மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவிடம் ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறியுள்ளது இந்திய அணி. 173 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணிக்கு தொடக்கம் சரியாக அமையாவிட்டாலும் கேப்டன் ஹர்மன்பிரீத், ஜெமிமாவுடன் அபார கூட்டணி அமைத்தார். இருவரும் 69 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
24 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ஜெமிமா வெளியேறினார். தொடர்ந்து வந்த ரிச்சா கோஷ் உடன் 35 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார் ஹர்மன்பிரீத். 34 பந்துகளில் 52 ரன்கள் எடுத்த நிலையில் ஹர்மன்பிரீத், ரன் அவுட் ஆனார்.
இந்திய மகளிர் அணி 15ஆவது ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்களை கடந்தது. நன்கு செட்டில் ஆன நிலையில் ஹர்மன்பிரீத் கவுர் களத்தில் இருந்தார். 15ஆவது ஓவரின் நான்காவது பந்தை ஆஸி வீராங்கனை ஜார்ஜியா வேர்ஹாம் ஃபுல் டெலிவரியாக வீச, ஹர்மன்பிரீத் அதை லெக் சைடில் ஸ்வீப் ஷாட் ஆடினார். பவுண்டரி நோக்கி சென்ற அந்த பந்தில் இரண்டு ரன்கள் முற்பட்டபோது அவரின் பேட் சரியாக கிரீஸை தொட முடியாததால் எதிர்பாராதவிதமாக ரன் அவுட் ஆனார்.