
இந்திய மகளிர் அணி சமீபத்தில் நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் இந்திய மகளிர் அணி 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து மகளிர் அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் பேட்டர்களுக்கான பட்டியலில் இங்கிலாந்தின் நாட் ஸ்கைவர் பிரண்ட் முதலிடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட் இரண்டாம் இடத்திலும், இலங்கை அணியின் சமாரி அத்தபத்து 3ஆம் இடத்திலும், இந்திய அணியின் ஸ்மிருதி மந்தனா 4ஆம் இடத்திலும் தொடர்கின்றனர்.
மேற்கொண்டு நியூசிலாந்து தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மூன்று இடங்கள் முன்னேறி மீண்டும் 10ஆம் இடத்திற்குள் நுழைந்துள்ளார். மேற்கொண்டு தீப்தி சர்மா ஒரு இடம் முன்னேறி 20ஆம் இடத்தையும், நியூசிலாந்தின் புரூக் ஹாலிடே 12 இடங்கள் முன்னேறி 24ஆம் இடத்தையும், இந்திய அணியின் யஷ்திகா பாட்டியா 3 இடங்கள் முன்னேறி 45ஆவது இடத்தையும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.