
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 டி20 உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து அடுத்ததாக பாகிஸ்தானுக்கு பயணித்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக பாகிஸ்தான் மண்ணில் 17 வருடங்கள் கழித்து ஒரு டெஸ்ட் தொடரில் களமிறங்கியுள்ள இங்கிலாந்து டிசம்பர் 1ஆம் தேதியன்று தொடங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
ஆனால் வழக்கத்திற்கு மாறாக இது டெஸ்ட் போட்டி என்பதை மறக்கும் அளவுக்கு முதல் ஓவரிலிருந்தே அதிரடியாக பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சு கூட்டணியை கொண்ட பாகிஸ்தான் பவுலர்களை லோக்கல் பவுலர்களை போல் சரமாரியாக வெளுத்து வாங்கினார்கள். இதனால் முதல் இன்னிங்ஸில் 657 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக அறிமுக வீரர் ஜாஹிட் முஹம்மது 4 விக்கெட்களையும் நசீம் ஷா 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
அதை தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி பதிலடி கொடுத்தது என்றே சொல்லலாம். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கே உரிய நிதான ஆட்டத்தை கையிலெடுத்த பாகிஸ்தான் தொடக்க வீரர்கள் அசாத் சபிக் மற்றும் இமாம்-உல்-ஹக் ஆகியோர் ஆரம்பம் முதலே நங்கூரத்தை போட்டு விக்கெட்டை விடமாட்டோம் என்று அடம் பிடிக்கும் வகையில் இங்கிலாந்துக்கு பதிலடி கொடுத்தார்கள்.