
ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் தற்போது வரை நான்கு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா 2 வெற்றிகளைப் பெற்று 2-2 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளன.
இதையடுத்து தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று பிரிஸ்டோலில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியானது பென் டக்கெட், ஹாரி புரூக் மற்றும் பில் சால்ட் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 309 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதில் அதிகபட்சமாக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய பென் டக்கெட் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது இரண்டாவது சதத்தைப் பதிவுசெய்ததுடன் 107 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். அவருடன் இணைந்து விளையாடிய கேப்டன் ஹாரி ப்ரூக் 72 ரன்களிலும், அணியின் தொடக்க வீரர் பில் சால்ட் 45 ரன்களையும் சேர்க்க, ஆதில் ரஷித் 36 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தார்.