ஐபிஎல் 2025: யுஸ்வேந்திர சஹாலின் சாதனையை முறியடித்த ஹர்ஷல் படேல்!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் மிக குறைந்த இன்னிங்ஸ்களில் 150 விக்கெட்டுகளை வீழ்த்தி வீரர் எனும் சாதனையை ஹர்ஷல் படேல் படைத்துள்ளார்

லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ரிஷாப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இந்த தோல்வியின் மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது நடப்பு ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் வாய்ப்பையும் இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் படேல் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதன்படி இப்போட்டியில் ஹர்ஷல் படேல் ஒரு விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம் ஐபிஎல் தொடரில் தானது 150ஆவது விக்கெட்டை பூர்த்தி செய்தார்.
இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் மிக குறைந்த இன்னிங்ஸ்களில் 150 விக்கெட்டுகளை வீழ்த்தி வீரர் எனும் சாதனையை ஹர்ஷல் படேல் படைத்துள்ளார். முன்னதாக இந்திய சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சஹால் 118 போட்டிகளில் 150 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்த நிலையில், தற்போது ஹர்ஷல் படேல் 117 போட்டிகளில் 150 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனையைப் படைத்துள்ளார்.
குறைந்த போட்டிகளில் 150 விக்கெட்டுகள் (இந்திய பந்து வீச்சாளர்)
- ஹர்ஷல் படேல் - 117 போட்டிகள்
- யுஸ்வேந்திர சாஹல் - 118 போட்டிகள்
- ஜஸ்பிரித் பும்ரா - 124 போட்டிகள்
- புவனேஷ்வர் குமார் - 138 போட்டிகள்
- அமித் மிஸ்ரா - 140 போட்டிகள்
முன்னதாக நடப்பு ஐபிஎல் தொடரின் வீரர்கள் மெகா ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஹர்ஷல் படேலை ரூ.8 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது. இதனையடுத்து அவர் சன்ரைசர்ஸ் அணிக்காக நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி தனது திறனை நியாயப்படுத்தியுள்ளார். இந்த சீசனில் சன்ரைசர்ஸ் அணிக்காக 11 போட்டிகளில் விளையாடிய ஹர்ஷல் படேல் மொத்தமாக 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போட்டி குறித்து பேசினால், டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மிட்செல் மார்ஷ் 65 ரன்களையும், ஐடன் மார்க்ரம் 61 ரன்களையும் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களில் நிக்கோலஸ் பூரன் 45 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க தவறவினர். இதன்மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்களைச் சேர்த்தது.
Also Read: LIVE Cricket Score
பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் அபிஷேக் சர்மா 4 பவுண்டரி, 6 சிக்ஸர்களுடன் 39 ரன்களையும், இஷான் கிஷன் 35 ரன்களையும், ஹென்ரிச் கிளாசென் 47 ரன்களையும், கமிந்து மெண்டிஸ் 32 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 18.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
Win Big, Make Your Cricket Tales Now