
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடந்து முடிந்துள்ள முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவில் நியூசிலாந்து அணியானது 2-0 என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்தியதுடன் இந்திய மண்ணில்முதல் முறையாக டெஸ்ட் டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நவம்பர் 1ஆம் தேதி மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியைத் தழுவியதுடன் தொடரையும் இழந்துள்ள இந்திய அணி, மூன்றாவது போட்டியில் வெற்றிபெற்று ஒயிட்வாஷை தவிர்க்க வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதால், இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இப்போட்டிக்கான இந்திய அணியில் அறிமுக வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ரானா சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்சமயம் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடிவரும் ஹர்சித் ரானா அஸாம் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பந்துவீச்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன, பேட்டிங்கிலும் 59 ரன்களைச் சேர்த்துள்ளார். மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் சேர்க்கப்பட்டிருந்தார்.