
ஒவ்வொரு ஆண்டும் பிசிசிஐ மூலமாக இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடர் இதுவரை 16 சீசன்களை கடந்த வெற்றிகரமாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் இத்தொடரின் 17ஆவது சீசன் வரும் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடக்க இருக்கிறது.
இதற்கான மினி ஏலம் முதல் முறையாக துபாயில் வரும் டிசம்பர் 19 ஆம் தேதி நடக்க இருக்கிறது. இதற்கு முன்னதாக ஒவ்வொரு அணியிலும் தக்க வைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என்று ஐபிஎல் நிர்வாகம் அறிவுறுத்தியதைத் தொடர்ந்து நேற்று இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது.
மேலும், அணிகளுக்கு இடையில் டிரேட் முறையில் வீரர்களை மாற்றி கொள்ள வரும் டிசம்பர் 12 ஆம் தேதி கடைசி நாளாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்தது. ஏற்கனவே தக்க வைக்கப்பட்ட ஒவ்வொரு அணியும், டிரேட் முறையில் மாற்றிக் கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது. டிரேட் முறையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆல் ரவுண்டரான கேமரூன் க்ரீன், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும், குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஆல் ரவுண்டர் கேப்டனான ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.