
டி20 உலக கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, அரையிறுதியில் இங்கிலாந்திடம் படுதோல்வி அடைந்து தொடரைவிட்டு வெளியேறியது. அரையிறுதியில் இந்திய அணி நிர்ணயித்த 169 ரன்கள் என்ற இலக்கை இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி கோப்பையையும் ஜெயித்தது.
இந்திய அணி தோற்றது கூட பரவாயில்லை. ஆனால் தோற்ற விதம் படுமோசமானது. இங்கிலாந்து அணியின் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்த முடியாமல் படுதோல்வி அடைந்தது. டி20 உலக கோப்பையில் இந்திய அணி பவர்ப்ளேயில் அதிரடியாக விளையாடி ஸ்கோர் செய்யாதது, மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்கள் விக்கெட் வீழ்த்தாதது ஆகிய இரண்டும் தான் இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தன.
டி20 உலக கோப்பையில் பவர்ப்ளேயில் இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோரே 46 ரன்கள். அதுவும் நெதர்லாந்துக்கு எதிராக அடித்தது. அந்தளவிற்கு பவர்ப்ளேயில் இந்திய அணியின் பேட்டிங் மோசமாக இருந்திருக்கிறது. இந்திய அணி தோற்றுப்போனதற்கு பவர்ப்ளேயில் அதிரடியான தொடக்கம் அமையாததும் அதனால் போதுமான ஸ்கோரை அடிக்க முடியாததும் தான் காரணம். அரையிறுதியில் தோற்று வெளியேறியதற்கும் அதுவே காரணம்.