ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2025 ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 21 முதல் பெர்த்தில் தொடங்குகிறது. பெர்த் டெஸ்டுக்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. அந்த அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான சீன் அபோட் காயம் காரணமாக பெர்த் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
ஷெஃபீல்ட் ஷீல்ட் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் விக்டோரியாவுக்கு எதிரான போட்டியில் நியூ சவுத் வேல்ஸ் அணிக்காக சீன் அபோட் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் விளையாடினர். இப்போட்டியின் மூன்றாவது நாளில், முதல் அமர்வின் போது இரு வீரர்களும் காயம் காரணமாக மைதானத்தை விட்டு வெளியேறினர். இதையடுத்து அவர்களுக்கு ஸ்கேன் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.
பரிசோதனையின் முடிவில் ஜோஷ் ஹெசில்வுட் பெர்த் டெஸ்டுக்கு முன்பு அவர் உடல் தகுதியுடன் இருப்பார் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது. அதேசமயம் சீன் அபோட்டின் காயம் தீவிரமடைந்துள்ளதன் காரணமாக அவர் பெர்த் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியதாகவும், அவர் காயத்தில் இருந்து மீள்வதற்கு சில காலம் தேவைப்படலாம் என்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய அறிவித்துள்ளது.