
டி20 உலக கோப்பைக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தீவிரமாக தயாராகிவருகிறது. டி20 உலக கோப்பைக்கு முன்பாக ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 தொடரை வென்ற இந்திய அணி, தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டி20 தொடரையும் வென்று டி20 உலக கோப்பைக்கு அதே நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் செல்லும் முனைப்பில் உள்ளது.
டி20 உலக கோப்பையில் ஜடேஜா ஆடாத நிலையில், பும்ராவும் விளையாட முடியாத சூழல் உள்ளது. இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும். பும்ரா விளையாடாததால் டி20 உலக கோப்பையில் புவனேஷ்வர் குமார் மற்றும் ஹர்ஷல் படேல் ஆகிய 2 சீனியர் பவுலர்கள் மீது அழுத்தம் அதிகமாகும். ஹர்ஷல் படேல் இந்திய அணியில் அண்மையில் தான் அறிமுகமானார் என்றாலும், அவர் அனுபவம் வாய்ந்த சீனியர் பவுலர். எனவே அவர் மீது பொறுப்பு அதிகம்.
ஆனால் காயத்தால் ஆசிய கோப்பையில் விளையாடாமல், காயத்திலிருந்து மீண்டு வந்து ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடர்களில் விளையாடிவரும் ஹர்ஷல் படேல், அதிக ரன்களை வழங்கிவருகிறார். அது இந்திய அணிக்கு கவலையளிக்கும் விஷயமாக அமைந்துள்ளது. பும்ராவும் ஆடாத நிலையில், டி20 உலக கோப்பையில் ஹர்ஷல் படேல் தான் டெத் ஓவர்களை சிறப்பாக வீசவேண்டிய அவசியம் இருக்கிறது.