
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் எதிர்பாராத ஒரு சாலை விபத்தில் சிக்கிய காரணத்தால் இந்திய அணி தற்பொழுது நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. நடப்பு பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா பந்துவீச்சை அதிரடியாக விளையாடி ஆட்டத்தில் தாக்கத்தை உருவாக்கும் அளவுக்கு இந்திய அணியில் நடு வரிசையில் யாரும் கிடையாது.
ரிஷப் பந்த் இடத்தில் தற்பொழுது பரத் விளையாண்டு வருகிறார். இதுவரை ஐந்து இன்னிங்ஸ் விளையாடி உள்ள அவர் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ரிஷப் பந்த் இல்லாத காரணத்தால் அவர் இடத்தை நிரப்ப முதல் டெஸ்ட் போட்டியில் சூர்யகுமார் மற்றும் பரத் இருவர் இடம்பெற வேண்டியதாக இருந்தது. முதல் டெஸ்ட் போட்டியில் சூர்யகுமாரிடமிருந்து பெரிய ரன்கள் வரவில்லை.
அடுத்து இரண்டாவது போட்டியில் ஸ்ரேயாஸ் காயம் குணமடைந்து அணிக்கு திரும்பியதால் சூர்யகுமார் தனது இடத்தை இழந்தார். இந்த நிலையில் இந்திய அணி மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைய, அணியில் மீண்டும் மாற்றங்கள் தேவை என்கின்ற பேச்சுகள் என ஆரம்பித்திருக்கிறது. இதுகுறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் டேனிஷ் கனேரியா சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.