
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் 14ஆவது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்நிலையில் அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் குறித்த பேச்சு தற்போதே எழுந்துள்ளன. அதன்படி மார்ச் மாதம் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படும் 15ஆவது சீசன் ஐபிஎல் தொடருக்காக ஏற்கனவே உள்ள அணிகளுடன் அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய நகரங்களை தலைமையாகக் கொண்ட இரண்டு அணிகள் சேர்ந்து மொத்தம் 10 அணிகள் இந்த தொடரில் விளையாட உள்ளது.
இதன் காரணமாக தற்போது அனைத்து அணிகளும் கலைக்கப்பட்டு விரைவில் மெகா ஏலம் நடைபெற இருக்கிறது. இந்த மெகா ஏலத்திற்கு முன்னர் ஒவ்வொரு அணியும் 4 வீரர்களை மட்டுமே தக்கவைக்கும் என்கிற காரணத்தினால் தற்போது அனைத்து அணிகளும் தக்க வைக்கப்படும் வீரர்கள் குறித்து முடிவு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் டெல்லி அணி 2 இந்திய வீரர்களாக ரிஷப் பந்த் மற்றும் ஆவேஷ் கான் ஆகியோரையும் தக்கவைக்கும் என்று தெரிகிறது. அதேபோன்று வெளிநாட்டு வீரர்களாக ரபாடா மற்றும் நோர்ட்ஜே ஆகியோரை தக்கவைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.