
இந்தியாவின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா கடந்த 2016இல் அறிமுகமாகி 2018 வாக்கில் 3 வகையான இந்திய அணியிலும் தனது அபாரமான திறமையால் அற்புதமாக செயல்பட்டு ஒருசில சரித்திர வெற்றிகளுக்கு முக்கிய பங்காற்றினார். அதன் காரணமாக ஜாம்பவான் கபில் தேவுக்கு பின் ஒரு வழியாக இந்தியாவின் நீண்டகால தேடலான தரமான வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் கிடைத்துவிட்டதாக ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
குஜராத்தை சேர்ந்த இவரை உள்ளூர் கிரிக்கெட்டில் அபாரமாக செயல்பட்டதால் கடந்த 2015இல் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் தங்களது அணிக்கு அவரது சகோதரருடன் சேர்த்து வாங்கியது. அங்கு மிகச் சிறப்பாக செயல்பட்ட காரணத்தினாலேயே அடுத்த வருடமே சர்வதேச அரங்கில் அறிமுகமானார்.
அதனால் இந்தியாவுக்கும் ஐபிஎல் தொடரிலும் நீக்க முடியாத முதன்மை ஆல்-ரவுண்டராக உருவெடுத்த அவர் கடந்த 2019 உலகக்கோப்பைக்கு பின் சந்தித்த காயத்தால் பந்துவீச முடியாமல் தவித்தார். குறிப்பாக 2021 ஐபிஎல் சீசனில் பந்து வீச முடியாமல் தடுமாறிய அவர் பேட்டிங்கிலும் சுமாராகவே செயல்பட்ட போதிலும் நம்பர் ஒன் ஆல்-ரவுண்டர் என்பதற்காக துபாயில் நடந்த டி20 உலக கோப்பையில் தேர்வு குழுவினர் அவரை தேர்வு செய்தனர்.