உலகக்கோப்பை தொடரின் தொடக்க வீரர் யார்? - தினேஷ் கார்த்திக் பதில்!
ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரராக யார் களமிறங்குவார் என்ற கேள்விக்கு தினேஷ் கார்த்திக் பதிலளித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை 2022 தொடரின் அரையிறுதியில் இந்தியா சிறப்பாக செயல்படவில்லை.டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிராக 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்த பிறகு, தோல்விக்கான காரணங்களை கூறி, சில இந்திய வீரர்களை பலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
தோல்விக்கு முதல் காரணமாக ஓபனிங் பார்ட்னர்ஷிப்தான் இருக்கிறது. ரோஹித் சர்மா, கேஎல் ராகுல் இருவரும் தடவி தடவி ரன்களை சேர்த்ததால், இந்தியா பவர் பிளேவில் சராசரியாக 6 ரன்களை மட்டுமே இத்தொடரில் அடித்திருக்கிறது. அடுத்து, சீனியர் பந்துவீச்சாளர் சிறப்பாக சோபிக்காமல் இருந்ததும் தோல்விக்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.
Trending
அடுத்த வருடம் இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பை தொடரிலும் தொடக்க வீரர்கள் இப்படி சொதப்பும் பட்சத்தில், அது அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துவிடும். இதனால், சரியான தொடக்க வீரர்களை தேர்வுசெய்ய வேண்டிய கட்டாயத்தில் தேர்வுக்குழு இருக்கிறது.
ரோஹித் சர்மா கேப்டன் என்பதால், அவரது இடம் உறுதியாகிவிட்டது. மற்றொரு தொடக்க வீரருக்கான இடம்தான் காலியாக இருக்கிறது. இந்த இடத்திற்கு ஷிகர் தவன், கேஎல் ராகுல், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன் போன்றவர்கள் போட்டியில் இருக்கிறார்கள். இருப்பினும் தவன் அல்லது ராகுல் இருவரில் ஒருவருக்குத்தான் அந்த இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து தற்போது, இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் கூறுகையில், “கண்டிப்பாக ஷிகர் தவன்தான் தொடக்க வீரராக இருப்பார். இல்லையென்றால், அவரை தற்போதுவரை அணியில் வைத்திருப்பதே வீண். தவனுக்கு தற்போது 35 வயதாகிறது. எளிதாக அவரை அணியில் இருந்து நீக்கலாம். ஆனால், அவர் மீது நம்பிக்கை, எதிர்பார்ப்புகள் இருப்பதால்தான், இன்னமும் அணியில் வைத்திருக்கிறார்கள்.
ஐசிசி போட்டிகள் என்றாலே தவன் எப்படி ஆடுவார் என்பது பலருக்கும் தெரியும். பார்மில் இல்லையென்றாலும், ஐசிசி தொடர்களில் சிறப்பாக விளையாடியிருக்கிறார். ஒவ்வொரு போட்டிகளிலும் பங்களிப்பை கொடுத்திருக்கிறார். தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் நல்ல பார்மில் இருக்கிறார். மேலும், கேப்டன் பொறுப்பில் அவர் நல்ல அனுபவம் பெற்று வருவதால், இந்திய அணிக்கு கூடுதல் பலம் கிடைக்கும்” என தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now