கோலியின் ஸ்லெட்ஜிங் வெற லெவல் - மனம் திறந்த் சூர்யகுமார் யாதவ்
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி குறித்து, சக வீரர் சூர்யகுமார் யாதவ் பகிர்ந்துள்ள விஷயம் ஒன்று தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
ரஞ்சி தொடரில் சிறப்பாக ஆடி வந்தாலும், ஐபிஎல் தொடரில் கொல்கத்தா மற்றும் மும்பை அணிக்காக ஆடி வந்த பிறகு தான், சூர்யகுமார் யாதவிற்கு இந்திய அணியில் இடம் கிடைத்திருந்தது. அதிலும் குறிப்பாக, சில ஐபிஎல் தொடர்களில் தொடர்ந்து சிறப்பாக ஆடி வந்த சூர்யகுமார் யாதவிற்கு இந்திய அணியிலும் இடம் கிடைக்கவே இல்லை.
இதனால், கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் அதிகம் கேள்விகளை எழுப்பி இருந்தனர். ஐபிஎல் தொடரில் ஜொலித்த இளம் வீரர்கள் பலருக்கு இந்திய அணியில் இடம் கிடைத்து வரவே, சூர்யகுமார் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டார். கடைசியில், கடந்த 2021 ஆம் ஆண்டு, ஒரு நாள் மற்றும் டி 20 தொடரில் இந்திய அணிக்காக அறிமுகமாகி இருந்தார்.
Trending
தொடர்ந்து, இந்திய அணியின் அனைத்து தொடர்களிலும் இடம்பெற்று வரும் சூர்யகுமார் யாதவ், சிறந்த மிடில் ஆர்டர் வீரராகவும் திகழ்ந்து வருகிறார். இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி குறித்து சூர்யகுமார் யாதவ் தற்போது ஒரு கருத்தினை பகிர்ந்துள்ளார். 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில், மும்பை மற்றும் பெங்களூர் அணிகள் மோதிய போட்டியில், தனியாளாக போராடி, மும்பை அணியை வெற்றி பெற செய்திருப்பார் சூர்யகுமார்.
இந்த போட்டிக்கு மத்தியில், கோலி பந்தை எடுத்துக் கொண்டு, சூர்யகுமார் அருகே வர, இருவரும் மாறி மாறி எதுவும் பேசாமல் பார்த்துக் கொண்டே இருந்தனர். இதில், கோலியை சூர்யகுமார் பார்த்த விதம், பெரிய அளவில் பேசுபொருளாக மாறி இருந்தது.
இது பற்றி தற்போது மனம் திறந்த சூர்யகுமார், "அந்த போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமான போட்டியாகும். இதனால், விராட்டின் ஸ்லெட்ஜிங்கும் அதிகமாக இருந்தது. அப்போது எனது மனதுக்குள், கவனத்தை சிதற விடாமல் அணிக்காக வெற்றியை தேடி கொடுக்க வேண்டும் என முடிவு செய்திருந்தேன்.
அப்படி ஒரு சமயத்தில் தான், பந்து கோலியின் கைக்கு சென்றது. அந்த சமயத்தில் நான் சீவிங் கம் மென்று கொண்டிருந்தது இப்போதும் ஞாபகம் இருக்கிறது. பந்தை எடுத்த கோலி, என்னருகே நடந்து வரும் போது, என் இதயத் துடிப்பு எகிறியது. அவரும் எதுவும் பேசவில்லை. நானும் எதையும் பேசவில்லை.
என்னவானாலும் ஒரு வார்த்தை கூட பேசி விடக்கூடாது என்றும், ஒரு 10 வினாடிகள் தாண்டினால் அடுத்து ஓவர் சென்று விடும் என எனக்குள் நானே கூறிக் கொண்டேன். பின்னர் போட்டி முடிந்த பிறகு, விராட் கோலியை சந்தித்து பேசினேன்" என தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now