
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணியில் மோதும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வரும் 9ஆம் தேதில் நாக்பூர் மைதானத்தில் தொடங்குகிறது. மொத்தம் நான்கு போட்டிகள் இம்முறை நடக்கவிருக்கும் டெஸ்ட் தொடரில் அடங்கியுள்ளன. கடைசியாக 2017ஆம் ஆண்டு இந்தியாவில் விளையாடிய பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. மீதம் இருக்கும் போட்டிகளில் இந்திய அணி வென்று 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.
அதன் பிறகு இரண்டு முறை ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கிறது. கிட்டத்தட்ட 2015 ஆம் ஆண்டிலிருந்து இந்திய அணியை டெஸ்ட் போட்டிகளில் வீழ்த்தி தொடரை கைப்பற்ற முடியாமல் ஆஸ்திரேலியா திணறுகிறது. 1969 மற்றும் 2004 ஆகிய இரண்டு முறை மட்டுமே இந்தியாவில் ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இம்முறை பட் கம்மிஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலிலும் முதலிடத்தில் இருக்கிறது. தொடர்ச்சியான வெற்றிகளை பெற்று பலமிக்க அணியாகவும் காணப்படுகிறது.