
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஜனவரி 3ஆம் தேதி நேற்று கேப்டவுன் நகரில் தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் இந்த போட்டி தற்போது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த வகையில் நேற்று தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி முதலில் அந்த அணி பேட்டிங் செய்ய துவங்கியதும் போட்டியின் ஆரம்பத்திலிருந்தே பந்துவீச்சில் தனது அட்டகாசமான செயல்பாட்டை வெளிப்படுத்திய சிராஜ் ஒவ்வொரு ஓவரிலும் விக்கெட்டை வீழ்த்தும் படி மிகப் பிரமாதமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.
குறிப்பாக நேற்றைய முதல் இன்னிங்ஸில் அவர் தொடர்ச்சியாக 9 ஓவர்களை வீசி 3 மெய்டன்கள் உட்பட 15 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அவரது இந்த சிறப்பான பந்துவீச்சு காரணமாக தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 55 ரன்களில் சுருண்டது. பின்னர் தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய இந்திய அணியானது 153 ரன்களை குவித்தது. பின்னர் தென் ஆப்பிரிக்க அணியானது 98 ரன்கள் பின்தங்கிய நிலையில் தற்போது இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது.