ENG vs AUS, 3rd T20I: ஹாரி ப்ரூக், வில் ஜேக்ஸ் அதிரடியில் ஆஸியை வீழ்த்தியது இங்கிலாந்து!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணியானது டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய அணியானது தற்சமயம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றது. இதில் நடைபெற்ற முதலிரண்டு ஒருநாள் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணியானது வெற்றிபெற்று அசத்தியதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலை வகித்து வருகிறது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியானது செஸ்டர் லீ ஸ்ட்ரீட்டில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்ததுடன், ஆஸ்திரேலிய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் மிட்செல் மார்ஷ் மற்றும் மேத்யூ ஷார்ட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் மேத்யூ ஷார்ட் 16 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 24 ரன்களைச் சேர்த்த நிலையில் மிட்செல் மார்ஷும் தனது விக்கெட்டை இழந்தார்.
Trending
இதனையடுத்து ஜோடி சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித் மற்றும் கேமரூன் க்ரீன் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டிற்கு 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், கேமரூன் க்ரீன் 42 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மார்னஸ் லபுஷாக்னேவும் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். அதேசமயம் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்டீவ் ஸ்மித் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
அதன்பின் 60 ரன்களில் ஸ்டீவ் ஸ்மித்தும் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த அலெக்ஸ் கேரி மற்றும் கிளென் மேக்ஸ்வெல் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இவரும் இணைந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் கிளென் மேக்ஸ்வெல் 30 ரன்களில் ஆட்டமிழக்க, மறுபக்கம் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அலெக்ஸ் கேரி தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். பின்னர் அலெக்ஸ் கேரியுடன் இணைந்த ஆரோன் ஹார்டியும் அதிரடியாக விளையாடி வந்த நிலையில் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 44 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
ஆனாலும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அலெக்ஸ் கேரி 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 77 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணியானது 50 ஓவர்கள் மிடிவில் 7 விக்கெட்டுகளை இழந்தாலும், 304 ரன்களைக் குவித்தது. இங்கிலாந்து அணி தரப்பில் ஜோஃப்ரா ஆர்ச்சர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றிய நிலையில், பிரைடன் கார்ஸ், ஜேக்கப் பெத்தெல், வில் ஜேக்ஸ், லியாம் லிவிங்ஸ்டோன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இதனையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது.
அந்த அணியின் தொடக்க வீரர்கள் பில் சால்ட் ரன்கள் ஏதுமின்றியும், பென் டக்கெட் 8 ரன்களிலும் என அடுத்தடுத்து மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் ஹாரி ப்ரூக் மற்றும் வில் ஜேக்ஸ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் விக்கெட் இழப்பையும் தடுத்து நிறுத்தினர். இவரும் தங்கள் அரைசதங்களை பதிவுசெய்ததுடன் மூன்றாவது விக்கெட்டிற்கு 156 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். பின்னர் இதில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட வில் ஜேக்ஸ் 9 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 84 ரன்களை எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
இதனையடுத்து களமிறங்கிய ஜேமி ஸ்மித்தும் 7 ரன்களுடன் நடையைக் கட்டினார். இருப்பினும் மறுபக்கம் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் ஹாரி ப்ரூக் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். மேற்கொண்டு இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அவர் 13 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 110 ரன்களையும், அவருடன் இணைந்து விளையாடிய லியாம் லிவிங்ஸ்டோன் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 33 ரன்களையும் சேர்த்து இங்கிலாந்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர்.
Also Read: Funding To Save Test Cricket
மேற்கொண்டு இங்கிலாந்து அணி 37.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 254 ரன்களை எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டத்து. பின்னர் தொடர்ந்து மழை நீடித்து வந்த காரணத்தால் இப்போட்டியானது டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இங்கிலாந்து அணியானது 46 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இதன்மூலம் இந்த ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணி முதல் வெற்றியைப் பதிவுசெய்ததுடன் தொடரிலும் நீடித்து வருகிறது. இப்போட்டியில் சதமடித்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்த ஹாரி ப்ரூக் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
Win Big, Make Your Cricket Tales Now