
ஐசிசி நடத்தும் 2023ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை தொடர் வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் கோலாகலமாக நடைபெறுகிறது. இதற்கு முன் 1987, 2011 ஆகிய வருடங்களைப் போல் அல்லாமல் இம்முறை முதல் முறையாக முழுவதுமாக இந்தியாவிலேயே நடைபெறும் இந்த தொடரில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து வெற்றிகரமான ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலகின் டாப் 10 கிரிக்கெட் அணிகள் மொத்தம் 48 போட்டிகளில் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்த உள்ளன.
இந்நிலையில் வெளிநாடுகளில் தடுமாறினாலும் சொந்த மண்ணில் வலுவான அணியாக கருதப்படும் இந்தியா இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி 2011 போல கோப்பையை வென்று சரித்திரம் படைக்குமா என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. சொல்லப்போனால் 2013க்குப்பின் தொடர்ந்து கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் தொடர்ந்து தோல்வியை சந்தித்த இந்தியா நிறைய விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. எனவே இம்முறை அதை எப்படியாவது உடைத்து வெற்றி காண வேண்டும் என்ற முனைப்புடன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும் தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக இருந்து இருதரப்பு தொடர்களில் மிரட்டும் இந்தியா முக்கியமான நாக் அவுட் போட்டிகளில் சொதப்புவதில் இருந்து எந்த முன்னேற்றத்தையும் காணவில்லை என்பதை சமீபத்திய 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியும் காண்பித்தது. அத்துடன் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற முக்கிய வீரர்கள் முக்கிய போட்டிகளில் கை விடுவது மற்றும் அஸ்வின் போன்ற தரமானவர்களை தேர்வு செய்யாமல் கழற்றி விடுவது என சமீப காலங்களில் சந்தித்த தோல்விகளிலிருந்து இந்தியா எந்த பாடத்தையும் கற்காமலேயே இருந்து வருகிறது.