
வெஸ்ட் இண்டீஸ் - இந்திய அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் அறிமுகமான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் அறிமுக போட்டியிலேயே 171 ரன்கள் குவித்து ஏகப்பட்ட சாதனைகளை நிகழ்த்தியிருந்தார். அதோடு முதல் போட்டியில் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் இவ்விரு அணிகளுக்கும் இடையே நேற்று நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அதன்படி ட்ரினிடாட் நகரில் நேற்று தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததால் இந்திய அணி நேற்று தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடியது. அதன்படி நேற்றைய முதல்நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 288 ரன்கள் குவித்துள்ளது.
இந்த போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 74 பந்துகளை சந்தித்து ஒன்பது பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் என 57 ரன்கள் குவித்தும் தான் ஆட்டமிழந்த விதம் தவறான ஒன்று என்றும், அது மிகவும் ஏமாற்றம் அளிப்பதாகவும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் நேற்றைய போட்டி முடிந்த பின்னர் பேசியுள்ளார்.