
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் மிட்செல் மார்ஷ் 4 பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 67 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, அதிரடியாக விளையாடி வந்த ரிஷப் பந்த் சதமடித்து அசத்தியதுடன் 11 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் என 118 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்களைச் சேர்த்தது.
பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய ஆர்சிபி அணியில் விராட் கோலி 54 ரன்களில் விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜித்தேஷ் சர்மா 85 ரன்களையும், மயங்க் அகர்வால் 41 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 18.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.