
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் முதல் 6 லீக் போட்டிகளில் 6 தொடர் வெற்றிகளை பதிவு செய்துள்ளது. அதனால் புள்ளி பட்டியலில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து போன்ற வலுவான அணிகளை மிஞ்சி முதலிடம் பிடித்துள்ள இந்தியா அரையிறுதி வாய்ப்பையும் உறுதி செய்துள்ளது.
இதைத்தொடர்ந்து இலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளை எதிர்கொள்ளும் இந்தியா தங்களுடைய கடைசி போட்டியில் கத்துக்குட்டியான நெதர்லாந்தை எதிர்கொள்கிறது. கடைசியாக கடந்த 2011 உலகக்கோப்பையில் இந்தியாவில் விளையாடியிருந்த நெதர்லாந்து பல போராட்டத்திற்கு பின் ஜிம்பாப்வே நாட்டில் நடைபெற்ற குவாலிஃபையர் தொடரில் சிறப்பாக செயல்பட்டு இம்முறை மீண்டும் விளையாட தகுதி பெற்றது.
இதில் எளிதாக 400 ரன்களை எதிரணிகளைப் பந்தாடிய வலுவான தென் ஆப்பிரிக்காவை அசால்டாக தரம்சாலா நகரில் தோற்கடித்த நெதர்லாந்து மாபெரும் சாதனை படைத்தது. அத்துடன் வங்கதேசத்தையும் வீழ்த்திய அந்த அணி உண்மையாகவே இந்த தொடரில் நடப்பின் சாம்பியன் இங்கிலாந்து, முன்னாள் ஆசிய சாம்பியன் இலங்கை போன்ற அணிகளை விட சிறப்பாக செயல்பட்டு இந்திய ரசிகர்களின் பாராட்டுகளையே அள்ளி வருகிறது.