
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 16ஆவது லீக் போட்டியில் யுபி வாரியர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் யுபி வாரியர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.
இந்நிலையில் இப்போட்டியின் போது மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்மம்ப்ரீத் கவுர் யுபி வாரியர்ஸ் வீராங்கனை சோஃபி எக்லெஸ்டொனுடன் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. யுபி வாரியர்ஸ் இன்னிங்ஸின் கடைசி ஓவரின் போது மும்பை இந்தியன்ஸ் அணியால் குறிப்பிட்ட நேரத்தில் ஓவர்களை வீச முடியவில்லை. இதன் காரணமாக அந்த அணிக்கு அபராதமாக 30 யார்ட் வட்டத்திற்கு வெளியே மூன்று வீரர்களை மட்டுமே நிறுத்த வேண்டும் என நடுவர்கள் கூறினர்.
இதனால் அதிருப்தியடைந்தா ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் பந்துவீச்சாளர் அமெலியா கெர் ஆகியோர் கள நடுவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதற்கிடையில் பேட்டிங் செய்ய களத்தில் இருந்த யுபி வாரியர்ஸ் வீராங்கனை சோஃபி எக்லெஸ்டோனும் நடுவரிடம் ஏதோ கூற, அதனால் கோபமடைந்த ஹர்மன்ப்ரீத் கவுர் அவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதற்கு எக்லெஸ்டோனும் கோபமாக பதிலளிக்க இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது.